சூரிய உலையில்
சிலிகானும் உபரியும் உருக்கி
அண்டம் கொள்ளா
பந்தினை படைத்தான்
கண்ணாடி பந்தினை
படைத்தான்.
பல கோடி நூறாண்டுகள்
கையினில் தாங்கி
தானே தன் கையால்
பட்டையும் தீட்டி
பாரில் இல்லா பளபளப்பும்
பூசி, ஒளியும் சேர்த்தான்,
மின்னிடும் ஒளியும்
சேர்த்தான்.
வெற்று வானில்,
பல ஒளிஆண்டுகள்
தொலைவில்,
சிறு கதிரும் தப்பிடா
இருளினில்,
தனிமையில்
மின்னும் பந்திற்கோர்
வண்ணம் சேர்த்தான்,
கரிய ஓர் வண்ணம்
சேர்த்தான்…
கருவினில்,
நீ தோன்றிய பொழுதினில்,
உன் விழியினில்
அதைப் பதித்தான்,
படைத்தவன் உன்
விழியினில் அதை
பதித்தான்.
அவன் தன் கைவண்ணம்
நான் வியக்க வேண்டி, முன்னே,
என் கண் முன்னே
உனையும் நிறுத்திச் சென்றான்;
பார்த்தேன்; புகழ்ந்தேன்.
அவன் திறன் புகழ்ந்தேன்.
’அருகினில் சென்று
ஆராய்வாய்!’ என்று
ஆசையும் தூண்டிட,
நெருங்கினேன்,
அருகினில் நெருங்கினேன்.
அகில பிரபஞ்சமும்
அதிலேச் ஓர் புள்ளியும்
என எனையும் காட்டிற்றே!
உன் விழி தான்
எனையும் காட்டிற்றே.
உறைந்தே, சிலை
என நான் நின்ற நேரம்,
இமை திரை வீழ்த்தி
விழியினை அடைத்தாய்,
என் உலகமே!
அந்நொடி முதல்
என் உலகமே இருண்டதே.
இருளினில் இன்றும்,
இன்னல்கள் கொள்கிறேன்,
விழியினை நீயும்
என்றடி திறப்பாய், தீபமே, என்
சிறு உலகும் மீண்டும் ஒளி
பெற?
No comments:
Post a Comment