சர்க்கரைக் கோலமிடுவோம்

எல்லைகள் மறைந்து
தொல்லைகள் தீர்ந்து
தோலாலும், தொழிலாலும் ஆன
வேறுபாடு மாறுபட்டு
பட்டினி சாவுகள் இன்னொரு பகல் காணா
நாள் அதனை நான் காண்பேனோ!

ஆயுதங்கள் ஒன்று திரட்டி
அதனால்
பாலங்கள் பல அமைத்து
கண்டங்கள் நாம் இணைத்து
சண்டைகள் அவை மறந்து
மனம் மகிழ்ந்திடும் நாள் அதனை
நானும் என்று காண்பேனோ!

அந்நாள்,
நன்னாள்,
வருநாள்...
தேன் தெளித்து வாசலில்
சர்க்கரைக் கோலமிடுவோம்,
படபடக்கும் வண்ணத்துபூச்சிகளும்
எந்திரமாய் ஓடிடும் எறும்பு கூட்டமும்
கூடி விருந்துண்ண.

மானும் மானிடமும்
யானும் நீயும்
பசி, பழி, பகை, பாபம்
யாவும் மறந்த
பகல் ஒன்று இனி புலர
நாளெல்லாம் நான் ஏங்குவேன்.