காத்திருப்பேன், இன்னும் சில சென்மங்கள்


விழித்துக் கொண்டு தானே இருந்தேன்,
உனை பார்த்த படியே!

இருந்தும் கவனிக்க மறந்தேன்,
எனை நோக்கி பறந்து வருவதை.

என் செவி துவாரத்தில் நுழையும் முன்
படபடத்த அதன், கண்ணாடிச் சிறகுகளின் சத்தம் மட்டுமே நான் அறிந்தேன்.

உடலை நெழித்து, செவிச் சுவர்களை அழுத்தி,
உள்ளே நுழைந்த பின்,

இருளில் தொலைந்து தடுமாறி,
தொண்டை குழியில் இடறி விழுந்து மறித்தும் போனதே, பாவம் !

முடிந்ததென நினைத்தேன்.

ஆனால்,
அதன் பிரேதம்
என் எச்சில் ஆற்றில் அடித்துச் செல்லப் படுகையில்,

சட்டென்று வெடித்ததில்,
கண்ணுக்கும் புலப்படாத சில நூறு சிறு துகள்கள் வெளியேறின.
அவை என்னென்று அந்நொடி அறிந்திலேன்.

பாலை ஒன்றில், தொலைவில் மணலைச்
சூரியன் முத்தமிடும் மாலை போலே, சிவந்திருக்கும்

இதய நிலத்தில்,
அத்துகள்களும் விழுந்தனவே.

இருண்ட இதயம் எனதே,
பார்வையால் விழி வழியே ஒளியும் அனுப்பினாய்.
ஒளி கிடைத்தது.

வறண்ட இதயம் எனதே,
புன்னகைத்தாய், எதிர் வீட்டு குழந்தையை கொஞ்சிட,
புயலோடு மழையும் தந்ததே,
நீர் கிடைத்தது.

வேரென்ன வேண்டும் இதற்கு மேல், சிறு வேர் விட்டு
சில நூறு பூச்செடிகள் மெல்ல முளைத்தனவே.

வெளி மணம் ஒன்றும் தெரியவில்லை,
மனம் முழுக்க பூக்களின் மணமே...
மூச்சு திணறிற்று; மூளை மயங்கிற்று.
தினம் நூறு பூக்கள்,
பூக்கும், தூங்கும்
வாட்டம் அறிந்ததில்லை அவை.

இனித்திருந்தேன், இனி என்ன தேவை எனக்கு,
இது போதும்,
இது போலும் இன்பம் வேறேது?
இயல்பில் இத்தனை சுகம் சாத்தியம் என்று நினைத்ததும் இல்லையே.
இன்பம் இன்பம் இன்னும் பொங்கும் இன்பம் இன்பம்...





புயல் ஒன்றும் வந்ததோ அறியிலேன். ஆனால்,
இதயம் நனைவதாய் மட்டும் நான் உணர்ந்தேன்.

மழை அல்ல. இது, மழை அல்ல.

வேருடன் நீ பறித்துச் செல்கையில்,
பாவம், வாய் பேசா பூக்கள் கண்ணீர் மொத்தம் சிந்தினவே.

நீ விதைத்தினால் நீயே பறித்துச் சென்றாயோ?
என் காதல் பூக்களை வேருடன் சேர்த்து...

நியாயம் தான். நீ செய்ததினால் இதுவும் நியாயம் தான்.

செடி ஒன்றை வேருடன் பிடுங்கிட நிலமும் என்னாகுமோ?
அதுவாய், என் இதயமும் புண்ணானதே.

சில நாட்களில் அதுவும் மறைந்திட எல்லாம் மறந்திடும் நம்பியிருந்தேன்.

சட்டென்று ஓர் நாள்,
ஏனோ என் இதயம் உறுத்திற்று,
என்னென்று நானறியேன். அறிவதும் ஏன்?

கவனிக்க நானும் நினைக்கலையே,
பூச்செடிகளின் நிலத்தில் சில முட்செடிகள் முளைத்தனவே.

இதயத்தினின்று வெட்டி எறிய இனியும் தெம்பில்லே,
விட்டு வைத்தேன், கட்டுபடுத்த நானும் முடியாமலே.

காலம் மெல்ல கரைய,
காட்டு தனமாய், முட்களும் வளர,

இதயம் கடந்து,
மேலும் கீழும், முன்னும் பின்னும்,
ஒன்றும் ஒன்றும் இரண்டென்று விரல் விட்டு எண்ணும் நொடிக்குள்,
உள்ளடங்கிய கிளைகள் என் சதை எல்லாம் கிழிய சுதந்திரமாய் விரிந்தனவே.

இரத்தம் சொட்ட சொட்ட...
இல்லை,
இரத்தம் கொட்ட கொட்ட,
என் கிழிந்த சதையும், குருதி தோய்ந்த தோலும்,
முட்களிலும், கிளைகளியும் அங்கங்கே ஒட்டி தொங்கினவே.

வேதனை இல்லை; வேதனை இல்லை.
வலி என்னை கொல்ல,
உயிர் மட்டும் ஏனோ வெட்கம் இன்றி தங்கியதே...

கிழிந்த இதயத்தில் மீண்டும் அதே வண்டு வந்து விதை தூவிடும் நம்பிக்கையோ...
காத்திருப்பேன், இன்னும் சில சென்மங்கள்...

1 comment:

  1. //விழித்துக் கொண்டு தானே இருந்தேன்,
    உனை பார்த்த படியே!//
    வாழ்த்துக்கள். கவிதை அருமை.

    ReplyDelete