நான் கரைந்தேன்

இல்லை இல்லை என நீ சொல்ல, அதை

மெல்ல மெல்ல நான் மறுத்தேன், உன் மனதை

வெல்ல வெல்ல தினம் தவித்தேன், நீ விலகிச்

செல்ல செல்ல நான் துடித்தேன்,

- ஒரு வழியாய் நீ, காதலை

சொல்ல சொல்ல நான் கரைந்தேன், எ(ன்)னை மறந்தேன்.

பொழிந்திடும் - இன்பம்

ஊற்றெனப் பெருகி,

கடலெனத் தேங்கி,

அலையென அலைந்து,

மழையெனப் பொழிந்திடும் - இன்பம்,

எரி மலையென வெடித்து, சிதறிடும் - துன்பம்.

இத்தனை அதிசயம் உன் பெயர் உச்சரிக்கும் ஓர் நொடியினிலேயே!!



மனதிற்குள் நனைகின்றேன்

நம் இருவரையும் ஓர் குடைக்குள் அடைத்து,

சுற்றிலும், திரையென மழை துளிகள் விரித்து,

தனிமையில் நம்மை,

சிறைப்பிடிக்கும் மழையினை நினைத்து, மனதிற்குள் நனைகின்றேன்.


பூ-விரல்

பூ-விரல் கொண்டு மெதுவாய்,

என் உள்ளங்கையில் நீ கோலமிட,

உன் பால் விழி பார்த்துக் கொண்டே, எங்கோ தொலைவில்,

பால்வழி அண்டம் கடந்து,

வாழ்வதாய் ஓர் உணர்வு.


சறுகாகும் தளிர்கள்!!


எவளோ பெற்று எங்கோ வீசியெறிய,
அங்கும் இங்கும் அலைந்து திரிந்து,
பிச்சை எச்சை பண்டம் உண்டு,
பசியும், பிணியும், வழியும் பொறுத்து,
தாயும் தந்தையும் தன்னையும் வெறுத்து,
ஏனென்றே தெரியாமல் வாழ்ந்து கொண்டு,
நல் வாழ்வை எதிர்நோக்கி,
நடைப்பாதையில் ஏங்கிக் கிடப்பாள்;

பெண்ணென்ற வாசம் வீசத் துவங்கிட்ட அவள் வயிற்றின்,
வெறுமைப் போக்கிட,
உணர்ச்சி கொண்டு, நிறைத்திட நினைக்கும்
நரிக் கூட்டம்,

'உதவுபவனை நரி என்கிறேனா? அவன் செய்யும் செயல் நீரேக் காண்பீர்!'

வெறுமை வதைக்க அவள் வாடிக் கிடப்பாள்,
காப்பார் இல்லாமல் ஓடி களைப்பாள்;

அவள் தன் வயிற்றில் ஒன்றுமில்லை,
கேட்பார் எவரும், என்றும் இல்லை,

ஓர் நாள் -
வேட்டையன் வருவான்;
"ஒரே நாளில் தீர்ந்திடும் உணவெதற்கு உனக்கு?
மாதங்கள் பத்து, நிலைத்திட விதைக்கிறேன் ஓர் வித்து ! "

என உரைப்பான்; விதைப்பான்;

'பிள்ளைக் கொடுக்கும் பெருமாள்கள் தான்
இந்நாட்டில் தெருப்பிள்ளையாரினும் எண்ணிக்கையில் அதிகமாயிற்றே !! '

இவளும்,
என்(ன) செய்வாள் இனி?

தானும் உண்டு, மாதங்கள் பல சுமைக் கொண்டு,
நன்னாள் எனக் கண்டு, பெறுவாள் இளங்கன்று;

'தனக்கே வாழ வழியில்லை, இனி தளிர்க்கென்ன விதி
செய்ய?'

இவளும் பெற்று எங்கோ வீசி எறிவாள்.

- அத்தனையும் மாறும், இவள் பெற்றதனை தவிர !!!;