பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் வேட்டி,
ஒரு கை கிழிந்தும் இன்னொரு கை தோல் பட்டை வரை மடித்தும் விடபட்ட சட்டை,
லேசாய் வளைந்த ஒரு தடி,
டீ சிந்தி சிந்தி அழுக்கான தாடி, அதில்
இரண்டு நாட்களுக்கு முன் குடித்த
சாம்பாரில் இருந்து ஒட்டிக் கொண்ட பருப்பு, அதை
அரைகுறையாய் துடைத்த அழுக்கு கைகளுமாய்
ஓர் முதியவர்.
புறப்படும் முன் அலறிய ட்ரெய்ன்ல், அடித்து பிடித்து ஏறி
அழு குரலில் நடு நடுங்கி
அனா கேட்டார்,
சட்டை பையை இரகசியமாய் தடவினேன்.
பசி பட்டினி என்று புலம்பினார்,
சட்டை பைக்குள் சலனமின்றி கையை விட்டேன்.
சட்டென்று காலில் விழுந்தார்,
விரலிடையில் சிக்கிய 5 ரூபாய் நாணயத்தை பின் தள்ளி,
பதற்றமின்றி தேடி எடுத்த ஒரு ரூபாயை,
அவர் கையில் விரல் படாமல் பக்குவாய் கொடுத்தேன்.
உழைக்க சக்தி இல்லா
ஓர் ஏழை முதியவருக்கு உதவிய பெருமிதத்துடன்
ஊராரின் சுயநல போக்கை தொடர்ந்து சாடினேன்.